×

கொரோனா தடை உத்தரவால் களக்காடு தேங்காய் உருளி சிற்றருவி வெறிச்சோடியது: தண்ணீர் விழுந்தும் குளிக்க ஆள் இல்லை

களக்காடு: கொரோனா தடை உத்தரவால் களக்காடு தேங்காய் உருளி சிற்றருவி வெறிச்சோடி காணப்படுகிறது. மிதமான அளவில் தண்ணீர் விழுந்தும் குளிக்க ஆள் இல்லை. நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தலையணை மலையடிவாரத்தில் தேங்காய் உருளி சிற்றருவி உள்ளது. இந்த அருவிக்கு செல்ல களக்காடு பஸ் நிலையத்தில் இருந்து தலையணை செல்லும் சாலையில் பயணிக்க வேண்டும்.  தலையணைக்கு கீழே வலதுபுறம் திரும்பும் சாலையில் திரும்பி சென்றால் சிவபுரம் வழியாக தேங்காய் உருளி அருவிக்கு செல்லலாம். சிவபுரம் வரை மட்டுமே கார்கள், டூவீலர்கள் செல்ல முடியும், அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து மட்டுமே செல்ல முடியும்.சுற்றிலும் பச்சை பட்டு உடுத்தியது போல், ஓங்கி உயர்ந்த மரக்கூட்டங்களின் அடர்த்தி, அதன் நடுவே திரண்ட பாறைகளின் மீதிருந்து வெள்ளியை உருக்கி விட்டது போல கொட்டும் தண்ணீர், ரீங்காரமிடும் வண்டினங்களின் ஓசை என இதன் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். தேங்காய் உருளி சிற்றருவி வன எல்கைக்கு வெளியே இருப்பதால் இங்கு செல்ல நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இங்கு ஒரு பாறையில் ராமர், லெட்சுமணர், சீதை சிலைகள் வடிக்கப்பட்டுள்ளது.

முன் காலத்தில் சீதையை தேடி திரிந்த ராமர் இங்கு வந்ததன் அடையாளமாக சிலைகள் வடிக்கப்பட்டுள்ளதாக பெரியவர்கள் கூறுகின்றனர். தற்போதும் பக்தர்கள் ராமர் உள்ளிட்ட சுவாமிகளின் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர். அத்துடன் கோவில் திருவிழாக்களுக்கு புனிதநீரும் எடுத்து செல்கின்றனர். இங்கு விழும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி தலையணை வழியாக ஓடி வருவதால் இதில் குளித்தால் நோய்கள் அணுகுவதில்லை என்றும் கூறுகின்றனர். இந்த அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் கோடை வெயிலில் தாக்கத்தால் கடந்த மே மாதத்தில் அருவி தண்ணீர் இன்றி வறண்டது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த சாரல் மழையினால் அருவியில் மிதமான அளவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்றி அருவி வெறிச்சோடி காணப்படுகிறது. உள்ளூர்வாசிகள் மட்டும் ஒரு சிலர் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். களக்காடு பச்சையாறு அணையில் இருந்தும் இந்த அருவிக்கு செல்ல பாதை உள்ளது. அணையில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் மண் சாலையில் 2 கி.மீ.தூரம் சென்றால் அருவியை அடையலாம்.


Tags : Coroner , Coroner's ban , stir-fired coconut, rolls, No water bathing
× RELATED கொடைக்கானல் மலைப்பகுதியில் டிசம்பர்...